The One In The House (Tamil)

Page 1

வீட்டில் ஒருவர் -ஸ்ரீதர் சதாசிவன் [Short story published on Thendral Tamil magazine (Feb 2011)] கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள் அல்ல யமுனா. அவளும் இந்நேரம் ஆபிசில் ரொம்பவே பிசியாக இருப்பாள். நிச்சயம் ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். "ஸாரி, ஐ ஹாவ் டு டேக் திஸ்" என்று எழுந்து கான்பரன்ஸ் ரூமைவிட்டு வெளியே நடந்தான் கார்த்திக். "என்னம்மா? " என்றான் போனை காதில் வைத்து. "கார்த்திக், அசோசியேஷன் ஆபிசிலேர்ந்து கால். பிரசாத் பேசினார். வித்யாவுக்கு வீட்டை எப்படி நீங்க வாடகைக்கு விடலாம்னு ஒரே கூச்சல். நாளைக்கு இதைப்பத்தி பேச ஸ்பெஷல் மீட்டிங் ஏற்பாடு பண்ணி இருக்காராம். நம்ம இரண்டு பேரையும் வரச்சொன்னார், சாயங்காலம் ஆறு மணிக்கு" யமுனாவின் குரலில் பதட்டம். "ஹ்ம்ம். நினைச்சேன்" கார்த்திக் பதறவில்லை. "அவர் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கும்போல" "ரிலாக்ஸ். நாம எதிர்பார்த்ததுதானே? பதறாதே" "எதிர்வீட்டு குமரகுரு ரொம்பவே கோபத்துல இருக்கானாம். அந்த ஆளு எப்போடா நம்மகூட சண்டை போடலாம்னு அலைவான்" சலித்துக் கொண்டாள் யமுனா. "அதனால? போடட்டும். நம்ம வீடு. யாருக்கு வாடகைக்கு விடணும்னு நாமதான் முடிவு செய்யணும். அசோசியேஷன் சட்டப்படி நாம செஞ்சதுல எந்த தப்பும் இல்லை. மீட்டிங் போட்டா என்ன? பயமா? பாக்கலாம்" உறுதியாய் சொன்னான் கார்த்திக். "சரி. ஈவினிங் பேசலாம். எனக்கு வேலை எக்கச்சக்கம்." "சரிம்மா" என்று போனை துண்டித்தான் கார்த்திக். ***** கார்த்திக்கும் யமுனாவும் கணிப்பொறி துறையில் பணியாற்றுகிறார்கள். பல வருடங்கள்


வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு போன வருடம் சென்னையில் செட்டிலானார்கள். ஏர்போர்ட் பக்கத்தில் மிகவும் விலை உயர்ந்த ஒரு சொகுசு குடியிருப்பில் அடுத்தடுத்ததாக இரண்டு வீடுகள் இவர்களுடையது. ஒன்றில் வசிக்கிறார்கள், இன்னொன்றை வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். போன மாதம் வீடு காலியானவுடன், புரோக்கர் பரமசிவத்திடம் சொல்லி வைத்தார்கள். பரமசிவம் இவர்களுக்கு நன்றாகவே பழக்கம். இவர்கள் வெளிநாட்டில் இருந்த பொழுது வீடு பரமசிவத்தின் பராமரிப்பில்தான் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்னால் தயங்கி தயங்கி, பரமசிவம் கார்த்திக்-யமுனாவிடம் விஷயத்தை ஆரம்பித்தார். "சார், நீங்களும் யமுனா மேடமும் ரொம்ப நல்ல மனுஷங்க. பறந்த மனசு உள்ளவங்க. அதனாலதான் உங்ககிட்ட கேக்கறேன். உங்களுக்கு இஷ்டம் இல்லைனா வேண்டாம்" வித்யாவைப் பற்றியும், அவள் வீடு தேடித்தேடி அலுத்துப் போய் இருப்பதைப் பற்றியும் விவரமாகச் சொன்னார். "யாருமே வீடு குடுக்க மாட்டேங்கறாங்க சார், பாவம்" கார்த்திக்கும், யமுனாவும் ஒரு நொடிகூட தயங்கவில்லை. "எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை பரமசிவம்" என்றாள் யமுனா. "ஆமாம். வீட்டை நல்லா வெச்சுக்கணும். வாடகை தவறாம குடுக்கணும், அவ்ளோதான்" என்றான் கார்த்திக். "அதெல்லாம் கண்டிப்பா குடுத்துடும் சார். எனக்குத் தெரிஞ்ச பொண்ணு. உங்களுக்கு சம்மதம்னா, உடனே நான் அட்வான்ஸ் ஏற்பாடு பண்றேன்." "அவங்க வீட்டை பாக்க வேண்டாமா?" என்றாள் யமுனா. "இப்போ அது மும்பையில இருக்கு மேடம். வீட்டை எல்லாம் பாக்கணும்னு இல்லை. நான் சொன்னா போதும். ஏதாவது வீடு கிடைக்காதான்னு அது ரொம்ப ஆர்வமா இருக்கு." "சரி. அவங்களை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க" என்றான் கார்த்திக். ***** அடுத்த நாளே வித்யாவிடமிருந்து கால். "வணக்கம் சார்" என்றாள் வித்யா போனில். "ஹலோ! வணக்கம்" "பரமசிவம் எல்லாம் சொல்லி இருப்பார். நான் ஒரு பிலிம் எடிட்டர். டி.வீ சீரியல்ஸ்ல வேலை செய்யறேன் சார். நிறைய வெளியூர்ப் பயணம். மாசத்துல அஞ்சு - பத்து நாள்தான் வீட்டுல இருப்பேன். வாடகை கரெக்டா குடுத்துடுவேன் சார். வீட்டை நல்லா வெச்சுப்பேன்" என்றாள் வித்யா.


"நோ ப்ராப்ளம் வித்யா. பரமசிவம் சொன்னார். நீங்க தாராளமா குடி வரலாம்" "ரொம்ப, ரொம்ப நன்றி சார்" வித்யா மும்பையிலிருந்து உடனடியாக வரமுடியவில்லை என்றாலும் இணையம் வழியாக அட்வான்சை கார்த்திக்குக்கு அனுப்பி வைத்தாள். பரமசிவத்தின் உதவியுடன் அடுத்த வாரம் அவளது சாமான்கள் புது வீட்டில் வந்து இறங்கின. காய்கறி, வீட்டு வேலைக்கான ஆள், பேப்பர், பால் என்று எல்லாவற்றையும் பரமசிவமே ஏற்பாடு செய்து வைத்தார். வித்யா வந்து இறங்கும்வரை அக்கம்பக்கம் யாருக்கும் விஷயம் தெரியாது. குமரகுருவின் மனைவி, லிப்டில் யமுனாவை நிறுத்தி சுவாரசியமாக கேட்டாள். "வீடு ரொம்ப பிசியா இருக்கு, புதுசா ஆளு குடி வர்றாங்களா?" "ஆமாம்" "யாரு?" "வித்யான்னு பேரு" "ஓ! என்ன பண்றாங்க?" " பிலிம் எடிட்டர். டி.வீ சீரியல்ஸ்ல வொர்க் பண்றாங்க" "அவங்க மட்டும்தானா? வேற யாரு வீட்டுல?" "அவங்க மட்டும்தான்" "சின்னப் பொண்ணா? இன்னும் கல்யாணம் ஆகலையா?" "இல்லை" "ஓ! நல்லதா போச்சு! ஒரு ஆளுனா தண்ணி ரொம்ப செலவாகாது" "ஹ்ம்ம்" "ஆமாம், சாமானெல்லாம் வந்து இறங்குது. ஆளை இன்னும் காணோம்? " "அவங்க இப்போ வேலைக்காக மும்பை போய் இருக்காங்க. புரோக்கர்தான் வீடு ஷிப்ட் பண்றார்"


"ஓ! அதுக்கு தனியா பைசாவா? " "தெரியல" யமுனா பதில் சொல்லி அலுத்துப் போனாள். "காசு இருந்தா போதும், இந்த காலத்துல எல்லாம் வீட்டு வாசல்ல வந்து நிக்கும்" "ஹ்ம்ம்" என்று கட்டாயமாகச் சிரித்தாள் யமுனா. ***** வித்யா போன வாரம் குடிவந்தாள். யமுனாவையும் கார்த்திக்கையும் முதல்முறையாகச் சந்திப்பதால், பூக்களும், இனிப்புகளுமாக வந்தாள். புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதால் சிறிது தயக்கமாகவே காணப்பட்டாள். யமுனாவும், கார்த்திக்கும் மிகவும் சரளமாக பேசிப் பழக அவளுக்குக் கொஞ்சம் தயக்கம் விலகியது. யமுனா அவர்களது பத்து வயதுப் பெண் ஸ்ருதியை வித்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அக்கம்பக்கத்தில் எங்கே என்ன கிடைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் விவரமாகச் சொன்னாள். "உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க" என்று யமுனா சொன்னபொழுது வித்யா நெகிழ்ந்து போனாள். "தாங்க்யூ மேடம்" குரல் தழுதழுக்கச் சொன்னாள். "அட என்ன நீங்க? ரிலாக்ஸ் வித்யா" "இல்லை மேடம். உங்களுக்கும் கார்த்திக் சாருக்கும் பெரிய மனசு. நான் கிட்டத்தட்ட ஆறு மாசமா ஒரு நல்ல எரியால வீடு கிடைக்காம, ஹோட்டல்ல தங்கிக்கிட்டு இருந்தேன். நீங்க கொஞ்சமும் தயங்காம வீடு குடுத்து இருக்கீங்க, எனக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. தாங்க்ஸ் அகய்ன்" மனமார நன்றி சொன்னாள் வித்யா. ***** அடுத்த நாள், மணி ஆறு. கிளப் ஹவுசில், அசோசியேஷன் மீட்டிங். அந்தக் குடியிருப்பில் மொத்தம் பத்து பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும் பன்னிரெண்டு வீடுகள். மொத்தக் குடியிருப்புக்கும் செகரட்ரி பிரசாத். பிளாக் அளவில் ஏதாவது பிரச்சனை அல்லது முக்கிய கூட்டம் என்றால், பிளாக் வாசிகள் மற்றும் செகரட்ரி ஒன்றுகூடுவார்கள். பொதுப் பிரச்சனை என்றால் குடியிருப்பில் இருக்கும் அத்தனை பேரையும் வரவழைத்து கூட்டம், வோட்டெடுப்பு நடக்கும். அன்று பிளாக் அளவிலான சந்திப்பு. எதிர்வீட்டு குமரகுரு, செகரட்டரி பிரசாத், மோதிலால், ஸ்ரீனிவாஸ், அருணா, கிருஷ்ணமூர்த்தி, ரகுராம் என்று அவர்கள் பிளாக்கில் வசிக்கும் அனைவரும் ஆஜர். யமுனாவும், கார்த்திக்கும் உள்ளே நுழைந்த பொழுது யார் முகத்திலும் சிரிப்பு இல்லை. "ஹலோ" என்றான் கார்த்திக்.


"ஹலோ கார்த்திக். ஹலோ மேடம். உக்காருங்க" என்றார் பிரசாத். "சொல்லுங்க சார், என்ன விஷயம்?" "என்ன சார்? ரொம்ப சாதராணமா கேக்கறீங்க?" எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்திருந்தாற்போல சத்தமாய் ஆரம்பித்தார் எதிர்வீட்டு குமரகுரு. "குரு, குரலை உயர்த்தாதீங்க. நாம சண்டை போட இங்க வரலை. நிதானமா பேசலாம்" என்று தடுத்தார் பிரசாத். "கார்த்திக், என்ன இது? நீங்க செய்யறது உங்களுக்கே நல்லா இருக்கா?" "என்ன பிரச்சனை சார்? அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்?" "இது ரொம்ப டீசன்டான காலனி. எல்லாரும் நல்ல வேலைல இருக்கறவங்க. குழந்தைங்க, வயசானவங்க எல்லோரும் இருக்கற பேமிலி ஏரியா. எல்லோரும் கஷ்டப்பட்டு ஒரு நல்ல ஏரியால வீடு வாங்கி குடி வந்திருக்கோம். நீங்க ஒரு அலிக்கு வீட்டை வாடகைக்கு எப்படி விடலாம்?" விஷயத்தைப் போட்டு உடைத்தார் பிரசாத். "என் டெனன்ட் வித்யா ஒரு திருநங்கை சார். ‘அலி'ங்கறது ஒரு தரக்குறைவான வார்த்தை, தயவுசெய்து அதைப் பயன்படுத்தாதீங்க" என்று இடைமறித்தான் கார்த்திக். "ரொம்ப முக்கியம்!" என்று நக்கலாய்ச் சொன்னார் ஓய்வு பெற்ற, வங்கி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி. அவரது மூன்று குழந்தைகளும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவியுடன் ஒரு பிளாட்டில் வசிக்கிறார், மீதி மூன்று பிளாட்ஸ் அவரது குழந்தைகளுடையது. "ஆமாம் சார். முக்கியம்" குரலை அழுத்தி சொன்னான் கார்த்திக். "சரி விடுங்க. திருநங்கை, போதுமா?" என்று அலுத்துக்கொண்டார் பிரசாத்."எப்படி நீங்க அதுக்கு வாடகைக்கு விடலாம்? இது ஒரு பேமிலி ஏரியா. கொஞ்சமாவது யோசிச்சு பார்த்திங்களா?" "என்ன சொல்றீங்க சார்? திருநங்கைகளும் மனுஷங்கதான் சார். அவங்களுக்கும் பேமிலி இருக்கு. வித்யா படிச்சவங்க. வேலை பாக்கறாங்க. அவங்களால உங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. வந்தா கண்டிப்பா நான் அவங்களை காலி பண்ணச் சொல்றேன்" தெளிவாய்ச் சொன்னான் கார்த்திக். யமுனா நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள், எதுவும் பேசவில்லை. அவள் எதிர்பார்த்ததுதான். கார்த்திக் ரொம்ப பிடிவாதக்காரன், ஒரு விஷயம் அவனுக்கு சரி என்று


பட்டுவிட்டால், கடைசி வரை போராடும் குணம் கொண்டவன். அவனை லேசில் யாரும் அசைக்க முடியாது. கார்த்திக்கின் இந்த குணம்தான் கல்லூரி நாட்களில் அவளை அவனிடம் ஈர்த்த விஷயம். இவர்களது கலப்புத் திருமணத்திற்கு ரொம்பவே எதிர்ப்பு இருந்தாலும் கடைசிவரை போராடி ஜெயித்தவன் கார்த்திக். காத்திக்கின் அப்பா, யமுனாவை ஜாதி மாற வேண்டும் என்று சொன்ன பொழுது, முடியாது என்று திட்டவட்டமாய் கூறியவன் கார்த்திக். இவர்களது திருமணம் கூட இருவரது ஜாதி முறையிலும் இல்லாமல், ரொம்ப எளிமையாக நடந்தது. இதோ ஸ்ருதிக்கு பத்து வயது, இந்தியா வரும்வரை ஜாதி என்றால் என்னவென்று கூட தெரியாது அவளுக்கு, அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்பது இருவரது முடிவு. "என்ன சார் விளையாடறீங்களா? இதுமாதிரி ஆளுங்களை எல்லாம் நம்ம காம்ப்ளெக்ஸ்க்குள்ள விடமுடியாது சார். உடனடியா காலி பண்ணச் சொல்லுங்க" குமரகுரு எதையும் காதில் வாங்குவதாய் இல்லை. "குமரகுரு, வீடு என்னோடது. நீங்க யாரு எனக்கு கண்டிஷன் போட?" குரலை உயர்த்தினான் கார்த்திக். "சண்டை வேண்டாம், ப்ளீஸ்" என்று இருவரையும் பார்த்துக் மீண்டும் கெஞ்சினார் பிரசாத். அதற்குள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களும் ஒவ்வொருவராய்ப் பேச ஆரமிபித்தார்கள். "கார்த்திக், நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. கண்ட கண்டவங்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டா, அக்கம்பக்கம் நாங்க எப்படி இருக்கறது?" என்று ஆரம்பித்தாள் அருணா. அருணாவுக்கும் கணிப்பொறித் துறையில் வேலை. கணவர், இரண்டு குழந்தைகள். கார்த்திக் வீட்டுக்கு அடுத்த வீடு, அதே தளத்தில். "அருணா, வித்யா ரொம்ப நல்ல டைப். பழகினா உங்களுக்கே தெரியும்" யமுனா இடைமறித்தாள். "என் குழந்தைங்க பயப்படறாங்க யமுனா. நேத்தி என் மாமனார் மாம்பலத்துலேர்ந்து வந்தவர், என்ன கருமம் இதுன்னு உடனே திரும்பிப் போயிட்டார்" "யெஸ்! நாட் அக்சப்டபில். நோ ஹிஜ்ராஸ்" என்று அருணாவுடன் சேர்ந்து கொண்டார் மோதிலால், நகை வியாபாரி. தமிழ் தெரியாது. "என்ன அருணா சொல்றீங்க? வித்யாவை பார்த்து அருவறுப்பு படவும், பயப்படவும் என்ன இருக்கு? அவங்களும் நம்மைப்போல ஒரு மனுஷிதான்" யமுனா. "ப்ளீஸ், வாக்குவாதம் வேண்டாம். இது பாமிலீஸ் இருக்கற காம்ப்ளெக்ஸ். ஒத்து வராது. காலி பண்ணச் சொல்லுங்க" திரும்பவும் அதையே சொன்னாள் அருணா. யாரும் விட்டுக்கொடுபதாகத் தெரியவில்லை. கூச்சல் அதிகரித்தது. எல்லோரும் சேர்ந்து ஒரே சமயத்தில் தாக்கினாலும், கார்த்திக் தளரவில்லை.


"பேமிலி ஏரியான்னு, இதோ கிருஷ்ணமூர்த்தி சார், பாச்சிலர்ஸ் பசங்களுக்கு வீடு தரமாட்டேன்னு, ஒரு பேமிலிக்கு விட்டார். என்ன ஆச்சு? பொண்டாட்டி, அம்மா வீட்டுக்குப் போனதும், அந்த ஆளு பிரெண்ட்ஸ கூப்பிட்டு, தண்ணி போட்டு ஒரே ரகளை. ஞாபகம் இருக்கா? அதான் பாஸ்கர், ஐ.ஓ.பீ" "................." கார்த்திக்கின் பேச்சிற்கு பதில் பேச்சில்லை கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து. "அருணா மேடம், நீங்க உங்க ஜாதி ஆளுங்களா தான் வேணும்னு, தேடித்தேடி உங்க வீட்டை வாடகைக்கு விட்டீங்க. அந்த ஆளு பொண்டாட்டிய அடிச்சு, நடு ராத்திரில, கொட்டற மழைல வெளில நிறுத்தினான். நம்ம வீட்டுக் குழந்தைங்க அதைப் பார்த்தா பரவாயில்லையா?" "அதான் அவங்களை காலி பண்ணச் சொல்லியாச்சே" என்று இழுத்தாள் அருணா. "கரெக்ட். அது மாதிரி வித்யாவால ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க, ஓ.கே. அவங்களைப் பத்தி எதுவுமே தெரியாம, நீங்களா உங்க இஷ்டத்துக்கு வகைப்படுத்தி ஒரு பிரிவையே வெறுக்கறது நியாயம் இல்லை" என்றான் கார்த்திக். "உடனே, பெரிய பெரிய வார்த்தை எல்லாம் போட்டு குழப்பாதீங்க கார்த்திக்" என்று புரியாமல் விழித்தாள் அருணா. "கார்த்திக், நீங்க ஒரு அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல இருக்கீங்க. இது உங்க தனிவீடு இல்லை, நீங்க உங்க இஷ்டத்துக்கு முடிவு செய்ய" என்றார் கிருஷ்ணமூர்த்தி. "இதுமாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இந்த காம்ப்ளெக்ஸ்ல இடம் இல்லை" "அப்படி எதுவும் சட்டம் கிடையாது" என்றான் நக்கலாய் கார்த்திக். "இதுதான் உங்க முடிவா?" பிரசாத் கேட்டார். "ஆமாம் சார். நீங்க கேக்கறதுல எந்த நியாயமும் இல்லை. அசோசியேஷன் சட்டப்படி வீட்டை கம்பனிகளுக்கு விடக்கூடாது, அவ்ளோதான். நான் அதை மீறலை. என்னால வித்யாவை வீட்டை காலி பண்ணச் சொல்ல முடியாது, ஸாரி" முடிவான பதில் வந்தது கார்த்திக்கிடமிருந்து. பதிலைக் கேட்டதும் விருட்டென்று எழுந்து நடந்தார் கிருஷ்ணமூர்த்தி. "இது நல்லா இல்லை, யமுனா" என்றாள் அருணா யமுனாவைப் பார்த்து. "இப்படியே விடமுடியாது! பாருங்க, அதைக் காலி பண்ண வைக்கறேன்" என்று சவால் விட்டார் குமரகுரு. கூட்டம் கலைந்தது.


***** நடந்ததைக் கேள்விப்பட்ட வித்யா கண் கலங்கிப் போனாள். "உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சார். நீங்களும் மேடமும் எனக்கு தெய்வம் மாதிரி" என்று கை கூப்பினாள். "அட, பரவாயில்லை வித்யா" என்றான் கார்த்திக். "எங்கள மாதிரி ஆளுங்களை யாரும் மனுஷங்களா கூட மதிக்கறது இல்லை சார். நாங்களும் மனுஷங்க தான், என்ன கொஞ்சம் வித்தியாசமானவங்க, அவ்ளோதான். நீங்க எனக்கு வீடு வாடகைக்கு தந்ததையே இன்னுமும் என்னால நம்ப முடியல. இன்னிக்கு நீங்களும் மேடமும் எனக்காக உங்க அக்கம் பக்கத்தோட சண்டை போட்டுட்டு வந்து இருக்கீங்க" வியந்து போய் நின்றாள் வித்யா. "எங்களுக்கு உங்க கஷ்டம் நல்லா தெரியும் வித்யா. நாங்க அமெரிக்கால இருந்தப்போ, எங்க நெய்பர் ஒரு ட்ரான்ஸ்ஜென்டர் வுமன், திருநங்கை. நாங்களும் முதல்ல கொஞ்சம் பழகத் தயங்கினோம். பழகப்பழக அவங்களும் எல்லாரையும் போலத்தான்னு தெரிஞ்சது. அவங்க மூலமா திருநங்கைகளப் பத்தியும், அவங்க வாழ்க்கையைப் பத்தியும் நிறையத் தெரிஞ்சிக்கிட்டோம். ரொம்ப நல்லவங்க அவங்க, பெயர் மார்கரெட். எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. ஸ்ருதிக்கு மார்கரெட் ஆண்டினா உயிர்" என்றான் கார்த்திக். "ஆமாம் வித்யா. கொஞ்சம் டைம் குடுங்க, இந்த காம்ப்ளெக்ஸ் ஆட்களும் நல்லவங்கதான். புரியாம பயப்படறாங்க. இதோ நீங்க இங்கதானே இருக்கப் போறீங்க. உங்களை டெய்லி பார்க்கத்தான் போறாங்க. கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கே புரியும்" என்றாள் நம்பிக்கையுடன் யமுனா. ***** மூன்று நாட்கள் கழித்து, வித்யாவுக்கும், கார்த்திக்-யமுனாவுக்கும் அசோசியேஷனிடமிருந்து கடிதம். வித்யா கடிதத்தை எடுத்துக்கொண்டு கார்த்திக் வீட்டுக்கு ஓடி வந்தாள். தொண்ணூறு சதவிகித ஓட்டுடன் அசோசியேஷன் சட்டம் திருத்தப்பட்டிருப்பதாகவும், புதிய சட்டப்படி திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு விடமுடியாது என்றும், ஒரு வாரத்தில் வித்யாவை காலி செய்ய சொல்லியும் செகரட்ரி பிரசாதிடமிருந்து வந்திருந்தது கடிதம். கொதித்துப் போனான் கார்த்திக். "வாட் நான்சென்ஸ்? நினைச்சேன், இந்த மாதிரி திருட்டுதனம் பண்ணுவாங்கனு. நேத்தி சுருதிக்கு பிறந்தநாள், இல்லைனா நாம அசோசியேஷன் கூட்டத்துக்கு போய் வோட்டுப் போட்டிருக்கலாம்." "நாம போயிருந்தாலும், எந்த பிரயோஜனமும் இல்லை கார்த்திக். தொண்ணூறு


சதவிகித வோட்டோட ஒரு முடிவெடுத்தா நாம என்ன பண்ண முடியும்?" கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை யமுனா. "மெஜாரிட்டி இருந்தா என்ன சட்டம் வேணா போடலாமா? என்ன அக்கிரமம்?" கொதித்தான் கார்த்திக். "ஸாரி சார். என்னால உங்க இரண்டு பேருக்கும் கஷ்டம் வேண்டாம். நான் ஒரு வாரத்துல வீட்டை காலி செஞ்சிடறேன்" என்றாள் சோகமாய் வித்யா. "நான் இதை ஒதுக்க மாட்டேன். நம்ம வீடு, நாம ஏன் பயப்படணும்?" "வேண்டாம் சார். சண்டை வேண்டாம். எனக்காக நீங்க எதுக்கு உங்க அக்கம்பக்கத்தை பகைசுக்கணும்? நீங்கதான் இங்க நிரந்தரமா இருக்கணும்" வித்யாவின் குரலில் தளர்ச்சி தெரிந்தது. "எனக்கு அக்கம்பக்கத்தைப் பத்தி சுத்தமா கவலை இல்லை வித்யா. நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா இவங்க யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. ஏதோ ஒரே காம்ப்ளெக்ஸ்ல இருக்கோமேன்னு பாத்தா சிரிச்சு பேசறோம், அவ்ளோதான். இவங்க என்ன நினைச்சா எனக்கென்ன? நீ என்ன சொல்ற யமுனா?" என்றான் கார்த்திக். "சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை கார்த்திக். அசோசியேஷன் சட்டம்னா எல்லோரும் கட்டுப்பட்டுதான் ஆகணும். இல்லைனா நம்ம வீட்டுக்கு தண்ணி கனக்சனை கட் பண்றதுலேர்ந்து, என்ன வேணா செய்யலாம் அவங்க. எல்லாம் சட்டத்துல இருக்கு, நம்மால எதுவும் பண்ண முடியாது" அவனை ஆசுவாசப்படுத்தினாள் யமுனா. "ச்சே" எரிச்சலும் இயலாமையும் முட்டிக்கொண்டு வந்தது கார்த்திக்கிற்கு. "ஸாரி வித்யா! வேற வழியில்லை" என்றாள் விதியாவைப் பார்த்து, தோல்வியை ஒப்புக்கொண்ட யமுனா. சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, துள்ளிக்குதித்தான் கார்த்திக். "இருக்கு யமுனா, வழி இருக்கு." ***** லிப்டில் மீண்டும் குமரகுருவின் மனைவியை யமுனா பார்த்தாள். "வீடு காலியாகுது போல?" என்று போலி அனுதாபத்துடன் கேட்டாள் அவள். "ஆமாம்" என்றாள் யமுனா. "எதுக்கு எல்லோரையும் பகைச்சுகிட்டு, என்ன நான் சொல்றது?"


பதில் பேசவில்லை யமுனா. "அது மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் வீடு குடுக்கக்கூடாது யமுனா, சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க" சுருக்கென்று குத்தியது யமுனாவிற்கு. "ஏன்?" என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்று கேட்டாள். "ஏன்னா? அது.. வந்து... அக்கம் பக்கம் என்ன சொல்லும்? இது பேமிலி ஏரியா. அதுங்களுக்கெல்லாம் வீடு வாடகைக்கு விடக்கூடாது" "ஓ! அப்படியா?" "ஆமாம். அதான் காம்ப்ளெக்ஸ் ஒட்டு போட்டு சட்டம் போட்டாச்சே, இனிமே தொல்லை இல்லை." "தெரியும். திருநங்கைகளுக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாதுனுதானே சட்டம். அதான் வித்யாவை நாங்க வீட்டை காலி பண்ணச் சொல்லிட்டோம். ஆக்சுவலி, அவங்க நாளைலேர்ந்து எங்க வீட்டுல தங்கறாங்க. மூணு பெட்ரூம் இருக்கே, எங்களுக்கு தாராளம். வித்யாவும் வாரத்துக்கு அஞ்சு, பத்து நாள்தான் ஊருல இருப்பாங்க, அதனால எங்களுக்கு பெரிய இடைஞ்சல் எதுவும் இல்லை" என்று யமுனா சொன்னபொழுது, அதிர்ச்சியில் வாய் அடைத்துப் போனாள் குமரகுருவின் மனைவி. "எங்க வீட்டுல்ல நாங்க யாரை வச்சிக்கலாம், கூடாதுன்னு எல்லாம் அசோசியேஷன் சட்டம் போட முடியாது பாருங்க. என்ன நான் சொல்றது?" என்று சிரித்தாள் யமுனா.


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.